விவசாயிகளைப் பாதிக்கும் மின்கட்டணத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர் கோவையைச் சேர்ந்த நாராயணசாமி நாயுடு. 1972-இல் இவரது தலைமையில் நடைபெற்ற மாட்டு வண்டிப் போராட்டம் பெயர் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, 1973-இல் தமிழக விவசாயிகள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைவராக நாரயணசாமி நாயுடு தேர்வாகி, விவசாயிகளை ஓரணியில் திரட்டினார்.
ஆட்சி, அதிகாரம் இருந்தால்தான் விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படையில் 1982-இல் இந்திய உழவர்- உழைப்பாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 1984-இல் பேரவைத் தேர்தலைச் சந்தித்து தோல்வியையும் கண்டது. பின்னர், நாராயணசாமி நாயுடு மறைவுக்குப் பிறகு, சங்கத்திலும், கட்சியிலும் பல்வேறு வகைகளில் பிளவு ஏற்பட்டது.
எனினும், சட்டப் பேரவைத் தேர்தலில் விவசாயிகளின் வாக்கு வங்கி ஆட்சியாளர்களுக்கு வெற்றியைத் தேடித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி என்ற ஒற்றை மந்திரத்தை வைத்து திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து விவசாயிகளைத் தங்கள் வசம் இழுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது, டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருந்ததால், அந்தக் கட்சியின் மீது விவசாயிகளுக்கு எப்போதும் மென்மையான அணுகுமுறையே இருந்து வருகிறது. இருப்பினும், எட்டு வழிச் சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம், விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் சற்று அதிருப்தியும் நிலவுகிறது.
தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள் மட்டும் 72 லட்சத்துக்கும் மேல் உள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நில உரிமையாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என கணக்கிட்டால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பில் 7.21 கோடி) 60 விழுக்காடு வேளாண்மைத் தொழிலை சார்ந்தவர்கள் என்கிறது புள்ளிவிவரம். தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடங்களில் எல்லாம் நான் ஒரு விவசாயி என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குறிப்பிட்டு வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், எதிர்வாதமாக முதல்வர் உண்மையான விவசாயி இல்லை என்பதை முன்நிறுத்தி வருகிறார். இந்தச் சூழலில், விவசாயிகளின் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்யப்போவது யார் என்பதே 2021 பேரவைத் தேர்தல் களத்தின் பிரதான கேள்வியாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் கே. சுந்தரம் கூறியது:
1970 முதல் 80 வரை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 40 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் கேட்டு ஆண்டுக்கணக்கில் போராடினோம். ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-இல் 40 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அதிமுக அரசு அதனை செயல்படுத்தியது.
சங்க நிறுவனத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு கோவையில் ரூ.1.50 கோடியில் மணிமண்டபம் கட்டித் தந்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததும் அதிமுக அரசுதான். இதுமட்டுமன்றி, நெல் விளைச்சலில் அதிக மகசூல் ஈட்டும் விவசாயிக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் விருதை, நாராயணசாமி நாயுடு பெயரால் வழங்குவதாக அறிவித்ததும் அதிமுக அரசுதான்.
காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு, காவிரி-கோதாவரி நதி நீர் இணைப்புத்திட்டம், காவிரி உபரி நீரை ஏரிகளுக்கு திருப்பும் சரபங்கா திட்டம் என தொடர்ந்து விவசாயிகளுக்கும், வேளாண் தொழிலுக்கும் ஆதரவாகச் செயல்படுவது அதிமுக மட்டுமே. எனவே, வரும் தேர்தலில் அதிமுக-வுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறியது:
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் சங்கத் தலைவர்களும், எந்த கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படாமல், விவசாயிகளை அவரவர் மனசாட்சிப்படியே வாக்களிக்கச் செய்ய வேண்டும். சாதி, மத, கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து செயல்படுவதே விவசாயிகளின் கடமையாக இருக்க வேண்டும்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியது:
விவசாயிகளைப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய பாஜக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விளைபொருள்களுக்கு ஆதாரமான விலை பெற்றுத் தரவில்லை. சிறு, குறு விவசாயிகளை அழித்து பெரு நிறுவனங்களுக்கு வழிவகை செய்யும் திட்டங்களையே முன்னெடுத்து வருவதால் பாஜக-வுக்கு எதிராக செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் .
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் த. குருசாமி கூறியது:
தமிழக விவசாயிகளின் வேளாண் தொழில் என்ற பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. உணவுப் பாதுகாப்பு, உணவு உற்பத்தி அதிகரிப்பு, விளைபொருள்களுக்கு ஆதார விலை, நதிகள் இணைப்பு, நவீன வேளாண் சந்தை, வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், பசுமைப் புரட்சி உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் அரசு வென்றெடுக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு கூறியது:
கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கு எதிராக வாராணசியில் 111 பேரை போட்டியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், பாஜக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. நதிகள் இணைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். விளைபொருள்களுக்கு இருமடங்கு விலை வழங்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மரபணு மாற்ற விதைகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பாஜக அரசு, இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து எங்களது கோரிக்கைகளுக்கு எதிராகவே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எனவே, அரவக்குறிச்சி, திருவண்ணாமலை தொகுதிகளில் பாஜக-வை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றோம். போலீஸார் எங்களைப் பாதி வழியிலேயே தடுத்து கைது செய்துவிட்டனர். இந்த இரு தொகுதிகளிலும் நடைபெறும் தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். தேர்தலில் எந்தக் கட்சியையும் எதிர்க்க வேண்டும் என்பதோ, ஆதரிப்பது என்பதோ எங்களது சங்கத்தின் நிலைப்பாடு இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.