முகப்பு
தமிழ்நாடு

சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் யானைகள் நடமாட்டம்: மின் ஊழியர்கள் பீதி

தேனி மாவட்டம் சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் மின் நிலைய ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

தேனி மாவட்டம் சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் மின் நிலைய ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையம் மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் மேற்கு மலைத் தொடர்ச்சி, பச்சக்கூமாச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் மின்சார ஊழியர்கள் குடும்பத்துடன் குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். இதுஅல்லாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளும் உள்ளன.

இந்த நிலையில் யானைகள் நிறைந்த இந்த வனப்பகுதியில், வியாழக்கிழமை சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதிகளில் சுமார் 10?க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்தன.  குடியிருப்பு பகுதியிலிருந்து மின்சார உற்பத்தி நிலையம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையின் நடுவிலேயே நின்றன. பின்னர் சாலையை கடந்து மின்சார உற்பத்தி நிலையம் அருகே உள்ள காட்டுக்குள் சென்றது.

சுமார் ஒரு மணி நேரமாக நடு சாலையில் யானைகள் தங்களது குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நின்று ஆடி அசைந்து கொண்டு சென்றதை  மின் உற்பத்தி நிலைய குடியிருப்புப் பகுதியில் உள்ள ஊழியர்களின் குடும்பத்தினர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 

தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதனால் வனப்பகுதியை விட்டு நிலப்பகுதிக்குள் நடமாடுகிறது, இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் வன ஆர்வலர் ரவிகாந்த்  கூறும்போது, 

யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க, வனப்பகுதியில் குடிநீர்த் தொட்டிகள், அகழிகள் அமைத்து, யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.