என் பெயரைச் சொல்லாமல் ஸ்டாலினால் அரசியல் நடத்த முடியாது: முதல்வர் பேச்சு
மானாமதுரை தேவர்சிலை அருகில் அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வெற்றித் திட்டங்களுடன் மக்களுக்கான கூடுதல் திட்டங்களையும் நிறைவேற்ற தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானாமதுரையில் பிரச்சாரம் செய்தார்.
மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். நாகராஜனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பகலில் தேவர் சிலை அருகே வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மக்களுக்கான வெற்றித் திட்டங்களை நிறைவேற்றி அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். அனைவருமே பொறுப்புக்கு வரலாம். ஆனால் திமுகவை பொருத்தவரை கருணாநிதியும் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தவிர வேற யாரும் கட்சி பொறுப்புக்கு ஆட்சி பொறுப்புக்கு வர முடியாது.
பழனிசாமி யார் என்றே தெரியாது எனக் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது எனது பெயரையே சொல்லி வருகிறார். என் பெயரைச் சொல்லாமல் அவர் அரசியல் நடத்த முடியாது. எனது பெயரைக் கூறாமல் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட முடியாது.
ஐந்தாண்டுகளில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசின் விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு நீர் மேலாண்மையில் மேலோங்கி நிற்கிறது எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் டெல்டா மாவட்டங்களில் 35 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களுக்கான ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்த திட்டங்கள் மக்களாகிய உங்களுக்கு வந்தடைய மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய ஆதரவு தர வேண்டும் என்றார்.