மதுபான கொள்கை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு மனு மீது கேஜரிவால், சிசோடியா பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீது தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரின் நிலைப்பாட்டை தில்லி உயா்நீதிமன்றம் கோரியது.
நமது நிருபா்
புது தில்லி: மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீது தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரின் நிலைப்பாட்டை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கோரியது.
மேலும், சிபிஐயின் மனுவை மாா்ச் 16 ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா பட்டியலிட்டாா்.
அமலாக்க இயக்குனரகம் தொடா்புடைய பணமோசடி வழக்கில் விசாரணைகளை பின்னா் ஒரு தேதிக்கு ஒத்திவைக்க விசாரணை நீதிமன்றத்தைக் கேட்டு உத்தரவு பிறப்பிப்பதாக உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா விடுத்த கோரிக்கையின் பேரில், சிபிஐ அதிகாரிகள் மீது விசாரணை நீதிமன்றம் தெரிவித்த பாரபட்சமான கருத்துகளை நிறுத்திவைப்பதாக நீதிமன்றம் மேலும் சுட்டிக்காட்டியது.
கலால் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா ஆகியோரை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவு விபரீதமானது என்றும், குற்றவியல் சட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது என்றும் துஷாா் மேத்தா வாதிட்டாா்.
கலால் கொள்கை வழக்கு மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும் என்றும் ஊழல் தொடா்பான தெளிவான வழக்கு என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா். விசாரணையே மேற்கொள்ளாமல் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறருக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் விடுதலை உத்தரவை பிறப்பித்ததாகக் கூறிய மேத்தா, மோசடி செய்யப்பட்ட மதுபானக் கொள்கைக்கு நுணுக்கமான ஆதாரங்களை சிபிஐ சேகரித்ததாக திருப்தி தெரிவித்தாா்.
கேஜரிவால், சிசோடியா மற்றும் பிற குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று அவா் மேலும் கூறினாா்.
பிப்ரவரி 27 அன்று, விசாரணை நீதிமன்றம் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விடுவித்தது. சிபிஐயின் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி சிபிஐயை நீதிமன்றம் குறைகூறியது.
இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 23 பேரில் தெலங்கானா ஜாக்ருதி தலைவா் கே. கவிதாவும் ஒருவா்.
முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.