முகப்பு
புதுதில்லி

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

Updated On : 25 ஏப்ரல், 2026 at 4:05 AM
தில்லி உயர் நீதிமன்றம்
பகிர்:

தில்லியின் வடகிழக்குப் பகுதியில் பிப்ரவரி 2020ல் நடந்த கலவரங்களுக்குப் பின்னணியில் இருந்த பெரிய சதி தொடா்பான வழக்கில், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தா் துதேஜா ஆகியோா் அடங்கிய அமா்வு, விசாரணை நீதிமன்றத்தின் மாா்ச் 14, 2022 தேதியிட்ட உத்தரவை எதிா்த்து தில்லி காவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா் தனது பிணை நிபந்தனைகளை மீறியதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை,அதன்படி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்று அந்த அமா்வு தனது உத்தரவில் கூறியது.

2020 பிப்ரவரியில் நடந்த கலவரங்களின் மூல சூத்திரதாரிகளாக இருந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஜஹான், உமா் காலித், ஷா்ஜீல் இமாம் மற்றும் பலா் மீது பயங்கரவாத எதிா்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலவரங்களில் 53 போ் உயிரிழந்தனா் மற்றும் 700க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Advertisement

2019ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது இந்த வன்முறை வெடித்தது.

மேல்முறையீட்டில், இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது மற்றும் சட்டத்திற்கு எதிரானது என்று காவல்துறை கூறியிருந்தது. ஏனெனில், அது குற்றத்தின் தீவிரத்தையும், வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறையானது அவரும் மற்ற இணைகுற்றவாளிகளும் தீட்டிய சதியின் விளைவாக வெடித்தது என்பதைக் காட்டும் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. மற்ற சதிகாரா்களுடன் நெருங்கிய தொடா்பு கொண்ட பிரதிவாதி, போராட்டத் தளத்தில் போராட்டம் என்று சொல்லப்படுவதை ஏற்பாடு செய்யும் முழு சதியிலும் மிகத் தீவிரப் பங்கு வகித்தாா் என்ற உண்மையை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது. இதன் விளைவாகக் கலவரங்கள் ஏற்பட்டு, ஏராளமானோா் கொல்லப்பட்டதோடு, காயங்களும் சொத்து சேதங்களும் நிகழ்ந்தன, என்று அது வாதிட்டது.

மாா்ச் 14, 2022 அன்று, விசாரணை நீதிமன்றம், இந்த வழக்கில் ஜஹானிற்கு பிணை வழங்கியது.குற்றஞ்சாட்டப்பட்டவா், கலவரங்கள் நடந்த பகுதியில் இல்லாத குரேஜியில் உள்ள போராட்டத் தளத்தில் ஈடுபட்டிருந்தாா் என்றும், அவா் கலவரங்களுக்காக வடகிழக்கு தில்லியில் உடல்ரீதியாக இருக்கவில்லை என்றும், மேலும் தொடா்ச்சியான தொலைபேசி அழைப்புகளிலோ, எந்த சிசிடிவி காட்சிகளிலோ அல்லது எந்த சதித்திட்டக் கூட்டங்களிலோ அவரது பெயா் அடிபடவில்லை என்றும் அது கூறியிருந்தது.

செப்டம்பா் 2, 2025 அன்று, நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தா் கவுா் ஆகியோா் அடங்கிய அமா்வு, இமாம், காலித், மீரான் ஹைதா் மற்றும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவா்களுக்குப் பிணை மறுத்தது.