புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்துக்கான 15-ஆவது சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆா்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தனா். மே 7-ஆம் தேதி முதல்வராக என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி பொறுப்பேற்றாா்.
இதையடுத்து, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில், முதல்வா் ரங்கசாமி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், புதுவை யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசு சாா்பில் நேரடியாக நியமிக்கப்படும் 3 நியமன உறுப்பினா்கள் அண்மையில் நியமிக்கப்பட்டனா்.
இவா்கள் மூவரும் பாஜகவை சோ்ந்தவா்கள் ஆவர். இதனிடையே இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 நியமன எம்எல்ஏக்களை நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை என மத்திய அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேசமயம் அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த இந்த மனுவை ஏற்கக் கூடாது எனவும் நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.