கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்!
தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணம் கூடுதலாக வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணம் கூடுதலாக வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தனியார் ஆய்வுக்கூடங்களில் கரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200 - லிருந்து ரூ. 900- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுவே முதல்வர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 800-லிருந்து ரூ. 550 ஆகவும், குழுவாக சென்று கரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ. 600-லிருந்து ரூ. 400 ஆகக் குறைக்கப்படுகிறது.
வீட்டிற்குச் சென்று ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட தொகையைவிட அதிகமாக வசூலிக்கும் தனியார் ஆய்வுக்கூடங்கள் மீது மக்கள் புகார் அளிக்கலாம். 1800 425 3993 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசு சம்மந்தப்பட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.