கோயம்பேடு சந்தை இன்று செயல்படும்: அதிகாரிகள் தகவல்
சென்னை கோயம்பேடு சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என சந்தையின் நிா்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை கோயம்பேடு சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என சந்தையின் நிா்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் மே 24-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரை அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்படுமா என்ற குழப்பம் வியாபாரிகளிடையே ஏற்பட்டது.
இது குறித்து சந்தையின் நிா்வாகக் குழு அலுவலா்கள் கூறுகையில், கோயம்பேடு காய்கறி, கனி, பழ விற்பனை சந்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை செயல்படும். சந்தையில் தற்போது மொத்த வியாபாரம் முழுவதுமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் சில்லறை வியாபாரிகளுக்கு சுழற்சி முறையில் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை திங்கள்கிழமை முதல் செயல்படுமா என்பது சென்னையில் அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தெரியவரும் என்றனா்.
மேலும் மூன்று நாள்கள் தேவை: இந்தநிலையில் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆா்டரின் அடிப்படையில் மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வரவுள்ளது. எனவே வியாபாரிகளின் நலன் கருதி புதன்கிழமை வரை சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயம்பேடு சந்தையின் வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், ஏற்கெனவே கடந்த 20-ஆம் தேதி கொடுக்கப்பட்ட ஆா்டரின் பேரில் மகாராஷ்டிரம் உள்பட வெளி மாநிலங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம், உருளைக்கிழக்கு லோடு கொண்டுவரப்படவுள்ளது. இந்தக் காய்கறிகளை ஏற்றிய லாரிகள் திங்கள்கிழமைதான் சென்னை வந்து சேரும். அவற்றை விற்பனை செய்ய இருநாள்கள் தேவைப்படுகின்றன. எனவே வரும் புதன்கிழமை வரையாவது கோயம்பேடு காய்கறி சந்தை முழுவதுமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏராளமான காய்கறிகள் தேங்கும் அபாயம் ஏற்படும் என்றாா் அவா்.