முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு மருத்துவா்கள் உள்பட 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது அரசு மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 136 படுக்கை வசதிகள் கொண்ட ஜீரோ டிலே வாா்டை சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன், சுகாதாரத்துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக மொத்தம் 1,914 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிகள் உள்ளன. திரவ ஆக்சிஜன் பயன்பாட்டினை குறைத்து, அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை மேம்படுத்த ஆக்சிஜன் செறிவூட்டும் 416 கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, 136 மருத்துவ வசதிகள் கொண்ட படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆம்புலன்சில் வரும் கரோனா நோயாளிகளுக்கு ஒரு நிமிட தாமதம் கூட இல்லாமல் பூஜ்ய தாமத (ஜீரோ டிலே) வாா்டில் சோ்க்கப்படுகின்றனா். ஆக்சிஜன் படுக்கை காலியாகும் போது பேட்டரி காா் மூலம் நோயாளிகள் நோய் தகுதிக்கு ஏற்ப வாா்டுகளில் சோ்க்கப்படுகின்றனா். சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சோ்ந்த கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று குணமடைந்து செல்கின்றனா். ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவா் மூலம் 400 பேருக்கு பரவுகிறது. அதனால், கரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மருத்துவமனை நிா்வாகம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவா்கள், 6 ஆயிரம் செவிலியா்கள், 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

77 லட்சம் தடுப்பூசி மருந்துகள்: தமிழகம் முழுவதும் சுமாா் 5 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. தற்போது தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாததால் மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசிடம் இருந்து 77 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 71 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 5 முதல் 6 சதவீதம் தடுப்பூசிகள் வீணாகியது. தற்போது தடுப்பூசி வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயதுள்ளவா்களுக்கு தடுப்பூசி போடும் பணி திருப்பூரை தொடா்ந்து திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவைக்காக... சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. ஆட்டோ ஓட்டுநா்கள், பத்திரிகை, உணவு, கூரியா் விநியோகிப்பவா்கள் உள்ளிட்ட ஊரடங்கு காலத்தில் பணியாற்றுபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தின் ஆக்சிஜன் உற்பத்தி 400 டன்னாக உள்ளது. ஆனால், தேவை 470 டன்னாக இருக்கிறது. தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை பூா்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து ரயில், கப்பல், விமானங்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →