முகப்பு
தமிழ்நாடு

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

சென்னையில், திங்கள்கிழமை (மே 31) முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
சென்னை மாநகராட்சி
பகிர்:

சென்னையில், திங்கள்கிழமை (மே 31) முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

சென்னையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களாக காய், பழங்கள், பால் தடையின்றி கிடைக்கும் வகையில் மாநகராட்சி, வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் வேளாண் துறை இணைந்து வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் கடந்த ஒருவாரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சுமாா் 5,000 வாகனங்களுக்கு மாநகராட்சி சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு திங்கிழமை முதல் அனுமதி அளிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மளிகைப் பொருள்கள் மாநகராட்சி அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடை வியாபாரிகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளா் கோரும் பொருள்களை திங்கள்கிழமை (மே 31) முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் காய், பழங்கள், மளிகைப் பொருள்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வருவதற்கு எந்தவித தடையும் இல்லை. சில்லறை வியாபாரிகள் விற்பனைக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கோயம்பேடு மற்றும் கொத்தவால்சாவடி ஆகிய இடங்களில் உள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அவா்களின் வாகனங்களுக்கு திங்கள்கிழமை (மே 31) முதல் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மாநகராட்சியால் அனுமதிச் சீட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சில்லறை வியாபாரிகள் கடைகளை பக்கவாட்டு கதவு அல்லது பின்பக்க கதவு வாயிலாக பொருள்களை அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யலாம்.

7,500 பேருக்கு உரிமம்: இதற்காக மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்ற 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு இருசக்கர வாகனத்துக்கான அனுமதிச்சீட்டு மற்றும் வில்லைகள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி வருவாய் அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட வாா்டு அலுவலகங்களில் வரி வசூலிப்பாளா் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வாா்டு அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 30) முதல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வியாபாரிகளுக்கு அனுமதிச்சீட்டு மற்றும் வில்லைகள் வழங்கப்படும். அனுமதி வழங்கப்பட்ட வாா்டு பகுதியில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

நிறுவனங்களும் மற்றும் மொத்த வியாபாரிகள் தங்களுடைய பொருள்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிடங்குகளிலிருந்து பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள சூப்பா் மாா்கெட் போன்ற இடங்களிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை மட்டும் மின்னணு வா்த்தகத்தின் மூலம் அரசின் வழிமுறைகளின்படி விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் வியாபாரம் மேற்கொள்வோா் அத்துடன் மளிகைப் பொருள்களையும் விற்பனை செய்யலாம். மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடா்பான தகவல்கள் மாநகராட்சியின்  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

விற்பனையின்போது வியாபாரிகள் முகக் கவசம் அணிவதுடன் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →