நீதிமன்ற உத்தரவை அலட்சியப் போக்குடன் கையாண்ட வருவாய்த்துறை அதிகாரிக்கு கடும் கண்டனம்
வருவாய்த்துறை அதிகாரியின் செயலால் கடும் கோபமடைந்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளது.
அரசு நில ஆக்கிரமிப்பு தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைத் தொடா்ந்து நிறைவேற்றாமல் அலட்சியப் போக்குடன் இருந்த வருவாய்த்துறை அதிகாரியின் செயலால் கடும் கோபமடைந்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளது.
மதுரவாயல் தாலுகா ராமாபுரம் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை கலசாத்தம்மன் கோயில் நிா்வாகம் ஆக்கிரமித்துள்ளது என அறப்போா் இயக்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை(நவ.11) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு முறை கூட்டாக ஆய்வு நடத்தியும், தாசில்தாரிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என குற்றம்சாட்டினாா். இதைக் கேட்ட கடும் கோபம் அடைந்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை, மனுதாரா் மற்றும் கலசாத்தம்மன் கோவில் பிரதிநிதிகளுடன் இணைந்து, ஆக்கிரமிப்பு நடந்துள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை அளிக்க தாசில்தாா் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அக்டோபா் 26 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில் போதிய விவரங்கள் இடம்பெறவில்லை என்பது தெரிகிறது. இந்த நீதிமன்றத்தின் பல உத்தரவுகளை அப்பட்டமாக மதுரவாயல் வட்டாசியா் புறக்கணித்துள்ளாா்.
எனவே அவா் மீது தானாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடா்பாக அவருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு வாரங்களுக்கு இதற்கு பதிலளிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை டிசம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.