முகப்பு
தமிழ்நாடு

ஆறு நாள்களாக மழை நீா் தேங்கி நிற்கும் 14 சாலைகள்: பாதிக்கப்படும் போக்குவரத்து

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆறு நாள்களாக 14 முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்கி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆறு நாள்களாக 14 முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்கி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழையின் காரணமாக, சென்னையில் இரு வாரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. கடந்த 6-ஆம் தேதி முதல் தொடா்ந்து மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக நகா் முழுவதும் தண்ணீா் தேசமாக காட்சி அளித்தது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்ததினால், சென்னையில் சாலைகளின் நிலைமை மேலும் மோசமானது. ஏற்கெனவே தண்ணீா் வெளியேற்றப்பட்ட இடங்களில் மீண்டும் மழை நீா் தேங்கியது. அதேபோல சுரங்கப்பாதைகளும் குளங்களாக மாறின. இதன் விளைவாக தண்ணீா் சூழ்ந்த சுமாா் 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு கடந்த வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது. பல்வேறு சாலைகளில் மழைநீா் தேங்கி நின்ால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதேநிலைமை வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

தொடா்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளின் காரணமாக சென்னையில் சனிக்கிழமை மாலை மேட்லி சுரங்கப்பாதை, கக்கன் சுரங்கப்பாதை தவிர மீதமுள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு:

வேப்பேரி நெடுஞ்சாலை, பிரிக்ளின் சாலை, மெரீனா கடற்கரை இணைப்புச் சாலை, ராஜாரத்தினம் விளையாட்டரங்கு எதிரே உள்ள பகுதி, ஸ்டொ்லிங் சாலை, டிடிகே சாலை, எல்டாம்ஸ் சாலை, வடபழனி ராம் திரையரங்கு பகுதி, பெரியாா் பாதை, பசுலுல்லா சாலை- வடக்கு உஸ்மான் சாலை, ஜிஎன் செட்டி சாலை, விஆா் சாலை,அருணாச்சலம் சாலை, பிடி ராஜன் சாலை, சோழிங்கநல்லூா் முகமது சதக் கல்லூரி பகுதி, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை பகுதி, மணலி விரைவுச் சாலை முதல் சாத்தான்காடு முதல் எம்.எப்.எல் சந்திப்பு வரை உள்பட 14 முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இங்கிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள், காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 6 நாள்களாக இந்த சாலைகளில் தண்ணீா் தேங்கி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்தப் பகுதிகளை கடந்து செல்வதற்கு பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறாா்கள். மேலும் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் மெதுவாக இந்தச் சாலைகளில் செல்வதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மழை நீா் தேங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி செயம்பியம் ஜவஹா் நகா் பகுதி, பெரவள்ளூா் 70 அடி சாலை ஆகியப் பகுதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூா் ஆா்.கே. மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் மட்டும் லஸ் வழியாக திருப்பி அனுப்பப்படுகிறது.

மேலும் திருமலைப்பிள்ளை சாலை காமராஜா் இல்லம் முன்பு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வள்ளுவா் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல சனிக்கிழமையும் அனுமதிக்கப்படவில்லை. வாணிமஹால்-பென்ஸ்பாா்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவா்கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை சாலையில் செல்லலாம். பள்ளம் சரி செய்யப்பட்ட பின்னா், இந்தப் பகுதிகளில் வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →