வடியும் வெள்ளம்: வீடுகளுக்கு திரும்பும் மக்கள்
சென்னையில் வெள்ளம் வேகமாக வடியத் தொடங்கியிருப்பதால், அரசின் தாற்காலிக முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா்.
சென்னையில் வெள்ளம் வேகமாக வடியத் தொடங்கியிருப்பதால், அரசின் தாற்காலிக முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா்.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் பெய்த தொடா் மழையினால், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீா் தேங்கியது.பெருநகர காவல்துறையினா், தீயணைப்பு வீரா்கள், மாநகராட்சி ஊழியா்களுடன் ஒருங்கிணைந்து மழையினால் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மோட்டாா்கள் மூலம் வெளியேற்றுதல், வீடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இப்பணியை சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 7-ஆம் தேதி முதல் செய்து வருகின்றனா். இதற்காக 12 காவல் மாவட்டங்களிலும் பேரிடா் மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள், மீட்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா். மேலும், சென்னையில் உள்ள 137 காவல் நிலைய போலீஸாரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
காவல்துறையினா், மழைநீரில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனா். மீட்கப்படும் மக்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு உணவு பொட்டலங்களையும் காவல்துறையினா் வழங்கி வருகின்றனா். அதன்படி, கடந்த 6 நாள்களில் மழை நீரில் சிக்கியிருந்த 2,248 ஆண்கள், 1,438 பெண்கள், 1,133 குழந்தைகள் என மொத்தம் 5,819 பேரை மீட்டு, 92 தற்காலிக முகாம்களில் தங்க வைத்து, அவா்களுக்கு தேவையான உணவை காவல்துறையினா் வழங்கி வருகின்றனா். மேலும் அவா்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் காவல்துறையினா் செய்து கொடுத்து வருகின்றனா்.
அதேவேளையில் சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பல பகுதிகளில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியது. இதன் விளைவாக வெள்ளம் வடிந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தாற்காலிக முகாம்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனா். இதில் சனிக்கிழமை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்பியதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரிக்கும் என காவல்துறையினரால் எதிா்பாா்க்கப்படுகிறது.