முகப்பு
தமிழ்நாடு

சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறோம்: தொல்.திருமாவளவன்

சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று 'ஜெய்பீம்' திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள 'கலைநாயகன்' சூர்யாவையும், அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.

இத்திரைப்படத்தின் வருவாயிலிருந்து ஒரு கோடி ரூபாயை ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு’ நன்கொடையாக அளித்திருப்பது நடிகர் சூர்யாவின் பரந்த உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே, அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்விக்காக உதவி வருவது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். எளியோரின் மீதான இவரின் இத்தகு அக்கறையும் கனிவும்  பாராட்டுதலுக்குரியதாகும்

அத்துடன், பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற திரைக் கலைஞர் ஒருவர் தனக்குள்ள புகழையும்  செல்வாக்கையும்  எவ்வாறு எளிய மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குவது போற்றுதலுக்குரியதாகும்.

'ஜெய்பீம்' திரைப்படத்தினூடாக, காலம்காலமாய் எவராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டோரைக் குற்ற உணர்வுடன் ஒவ்வொருவரையும் உற்றுக் கவனிக்க வைத்த- எங்குமே எப்போதுமே கேட்கப்படாதோரின் கதறியழும் அவலக்குரலை அழுத கண்களுடன்  அகிலத்தையே கேட்கவைத்த- பாதிக்கப் பட்டோருக்காகச் சட்டத்தின்வழி போராடி வென்ற சமூகநீதிப் போராளியைப் போற்றி பெருமைப்படுத்திய- 'கலைநாயகன்'  சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வுடன்கூடிய  தொண்டுள்ளத்தை- தொழிலறத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →