தமிழ்நாடு

நாகை: சாலையில் மாடு குறுக்கிட்டதால் தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி; நகராட்சிக்கு கண்டனம்

DIN

நாகப்பட்டினம் : நாகை மாவட்ட ஆட்சியரக பிரதான சாலையில் மாடு குறுக்கே சென்றதால் நிலைகுலைந்த ஆட்டோவின் மீது தனியார் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை காலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ஆட்டோ ஓட்டுநர்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நாகையை அடுத்த நாகூர் புதுமனை 2 -ஆவது தெருவை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் (58). ஆட்டோ ஓட்டுநர். இவர், வெள்ளிக்கிழமை அதிகாலை வேளாங்கண்ணியில் பயணிகளை இறக்கி விட்டு, நாகூருக்கு தனது ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தார். நாகை மாவட்ட ஆட்சியரகத்தை அடுத்த பால்பண்ணைச்சேரி அருகே பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாடு திடீரென சாலையின் குறுக்கே சென்றுள்ளது. 

உடனடியாக ஆட்டோவை நிறுத்த ஜெகபர் சாதிக் முயற்சிகள் மேற்கொண்டும், அந்த மாட்டின் மீது ஆட்டோ மோதி நிலைகுலைந்தது. அப்போது, அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, ஆட்டோவின் மீது மோதியது. இதில், ஆட்டோ ஓட்டுநர் ஜெகபர் சாதிக் பலத்தக் காயமடைந்து,  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நகராட்சிக்குக் கண்டனம்...

நாகை நகராட்சிக்குள்பட்ட சாலைகளில் 100-க்கும் அதிகமான மாடுகளும், குதிரைகளும் சுற்றித் திரிகின்றன.  இதன் காரணமாக, நாகை சாலைகளில் தினமும் விபத்துகள் நேரிடுகின்றன. இதனால்,  சாலையில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நாகை பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையொட்டி, நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் கடந்த அக்டோபர் மாத முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகமும், வருவாய்த் துறையும் நவம்பர் 18-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை. எனவே,  ஆட்டோ ஓட்டுநர் ஜெகபர் சாதிக் இறப்புக்கு நாகை நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சாலைகளில் திரியும் கால்நடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கடுமமையான நவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகத்துக்கும், வருவாய்க் கோட்ட நிர்வாகத்துக்கும் மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT