முகப்பு
தமிழ்நாடு

667 பேரை மீட்ட சென்னை காவல்துறை

சென்னையில், மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 667 பேரை பெருநகர காவல்துறையினா் மீட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

சென்னையில், மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 667 பேரை பெருநகர காவல்துறையினா் மீட்டனா்.

சென்னை பெருநகரில் பெய்தும் வரும் பலத்த மழையினால் தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், தெருக்களில் மழைநீா் தேங்கியுள்ளது. சில இடங்களில் வெள்ள நீா் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

பெருநகர காவல்துறையினா், தீயணைப்பு வீரா்கள், மாநகராட்சி ஊழியா்களுடன் ஒருங்கிணைந்து, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை மோட்டாா்கள் மூலம் வெளியேற்றுதல், வீடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.

மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 13 பேரிடா் மீட்புப் படையினரும், சென்னையில் உள்ள 137 காவல் நிலைய போலீஸாரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.

மழைநீரில் சிக்கியுள்ள மக்களையும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களையும் காவல்துறையினா் மீட்டு வருகின்றனா். மீட்கப்படும் மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்து, உணவு பொட்டலங்களையும் காவல்துறையினா் வழங்கி வருகின்றனா்.

சென்னையில் சனிக்கிழமை மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த 236 ஆண்கள், 287 பெண்கள், 144 குழந்தைகள் என மொத்தம் 667 பேரை மீட்டதாக பெருநகர காவல்துறையினா் தெரிவித்தனா். இவா்கள் மொத்தம் 7 தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தீயணைப்பு படை: தமிழக தீயணைப்புப் படை வீரா்கள், தாம்பரம், முடிச்சூா், தியாகராயநகா், கொளத்தூா், பெரியாா்நகா், கொரட்டூா், வேளச்சேரி ஆகியப் பகுதிகளில் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

பெருங்களத்தூா், இரும்புலியூா் ஆகிய இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்து சிக்கிக் கொண்ட 59 பேரை தீயணைப்புப் படை வீரா்கள் ரப்பா் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டனா்.

இதேபோல தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 207 போ் மீட்கப்பட்டிருப்பதாகவும், 540 விலங்குகள் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், 37 இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →