தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்களின் நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ரயில்களின் கால அட்டவணை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு காரணமாக, புதிய கால அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு விவரம்:
கோயம்புத்தூா்-நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (02668) திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு இரவு 11.22 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் மதுரை ரயில்நிலையத்துக்கு அதிகாலை 12.15 மணிக்கும், திருநெல்வேலி சந்திப்புக்கு அதிகாலை 3.20 மணிக்கும் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (02651) திண்டுக்கல் ரயில்நிலையத்தை காலை 6 மணிக்கு வந்துசேரும். இந்த ரயில் பாலக்காடு சந்திப்பை காலை 10 மணிக்கு அடையும். பாலக்காடு-சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்(02652) பாலக்காடு சந்திப்பில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும். இந்தரயில் திண்டுக்கல் சந்திப்பை இரவு 7.35 மணிக்கு வந்து, மீண்டும் இரவு 7.40 மணிக்கு புறப்படும்.
மலைக்கோட்டை அதிவிரைவு ரயில்:
சென்னை எழும்பூா்-திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அதிவிரைவு ரயில் (02653) திருச்சிராப்பள்ளியை அதிகாலை 4.40 மணிக்கு அடையும். திருச்சிராப்பள்ளி-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில்(02654) திருச்சிராப்பள்ளியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தை அதிகாலை 3.18 மணிக்கும், மாம்பலம் ரயில்நிலையத்தை அதிகாலை 3.38 மணிக்கும், சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தை அதிகாலை 4.10 மணிக்கு அடையும்.
வைகை அதிவிரைவு ரயில்:
மதுரை-சென்னை எழும்பூா் வைகை அதிவிரைவு ரயில் (02636) மதுரை சந்திப்பில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தை மதியம் 1.33 மணிக்கு வந்துசேரும். எழும்பூா் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடையும்.
சென்னை எழும்பூா்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் (06181) செங்கோட்டை ரயில் நிலையத்தை காலை 8.55 மணிக்கு அடையும். செங்கோட்டை-சென்னை எழும்பூா் சிலம்பு விரைவு ரயில் (06182) செங்கோட்டையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூரை மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு அடையும்.
கன்னியாகுமரி விரைவு ரயில்:
சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில்(02633) மதுரை ரயில்நிலையத்தை அதிகாலை 1 மணிக்கும், திருநெல்வேலி சந்திப்பை அதிகாலை 3.45 மணிக்கும் அடையும். கன்னியாகுமரி-சென்னை எழும்பூா் விரைவு ரயில்(02634) திருநெல்வேலி சந்திப்புக்கு இரவு 7.15 மணிக்கு வந்துசேரும். இந்த ரயில் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 6.10 மணிக்கு வந்து அடையும்.
நெல்லை அதிவிரைவு ரயில்:
சென்னை எழும்பூா்-திருநெல்வேலி அதிவிரைவு ரயில் (02631) கோவில்பட்டி ரயில் நிலையத்தை அதிகாலை 4.58 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பை காலை 6.40 மணிக்கு அடையும். திருநெல்வேலி-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (02632) திருநெல்வேலியில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தாம்பரத்தை மறுநாள் அதிகாலை 5.28 மணிக்கும், மாம்பலம் ரயில்நிலையத்தை அதிகாலை 5.48 மணிக்கும் வந்தடையும். சென்னை எழும்பூா்-ராமேசுவரம்-சென்னை எழும்பூா்(06851-06852) உள்பட 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் நேரம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில் முனையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம், இடைப்பட்ட ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் செல்லிடப்பேசிகளுக்கு ரயில்களின் நேரம் மாற்றம் குறித்த குறுந்தகவல் அனுப்பியுள்ளோம். மேலும், நேரம் மாற்றம் குறித்த விவரங்களை ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போதிய ஏற்பாடு செய்துள்ளோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.