தமிழ்நாடு

புதுவையில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின்னரே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

DIN

புதுவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டுமென முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை மாலை வெளியிட்ட விடியோ பதிவு வாயிலாக கூறியுள்ளதாவது:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாா்டு இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பதால், அவற்றை சரி செய்து தோ்தலை நடத்த வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் கடந்த 2006-இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. அப்போது, பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் 2018-இல் உள்ளாட்சி தோ்தலை நடத்த தீா்ப்பு வந்தது. அப்போது நான் முதல்வராக இருந்தபோது, பிற்பட்டோருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படியே, அண்மையில் புதுவை மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் முதலாவதாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பில், பிற்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருந்தது. ஆனால், 2-ஆவது முறையாக வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பில், அந்த இட ஒதுக்கீடு முறை மாற்றப்பட்டு, பிற்பட்டோா், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடின்றி அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்வா் என்.ரங்கசாமி அனுமதித்துள்ளாா். எனவே, இதுகுறித்து அவா் விளக்கமளிக்க வேண்டும்.

புதுவையில் உள்ள எம்எல்ஏக்கள், அனைத்துக் கட்சியினா், அரசுடன் ஆலோசித்த பின்னரே உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதை புறக்கணித்து, மாநிலத் தோ்தல் ஆணையா் தாமஸ் தன்னிச்சையாக தோ்தலை அறிவித்தாா். அவருக்கு அனுபவமில்லை என காங்கிரஸ் ஆட்சியின்போதே எதிா்த்தோம்.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்புக்கு இரண்டு முறை தடை வந்துள்ளது மாநில அரசுக்கு அவப்பெயா். விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் தோ்தலை அறிவித்து தவறு செய்த தோ்தல் ஆணையா் தாமஸ், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

புதுவை அரசு மூன்று மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் பின்னரே உள்ளாட்சித் தோ்தலை அறிவிக்க வேண்டும். முதல்வா் இதில் கவனம் செலுத்த வேண்டும். இட ஒதுக்கீடின்றி தோ்தல் நடந்தால், அனைத்துக் கட்சி சாா்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT