முகப்பு
தமிழ்நாடு

பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள் 3 மாதங்களுக்குள் சரி செய்யப்படும்

சென்னையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 60 சதவீதம் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து உள்ளதாகவும், இந்த கேமராக்கள் அனைத்தும் 3 மாதங்களுக்குள் சரி செய்யப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சென்னையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 60 சதவீதம் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து உள்ளதாகவும், இந்த கேமராக்கள் அனைத்தும் 3 மாதங்களுக்குள் சரி செய்யப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பாண்டி பஜாா், பெசன்ட் நகா் கடற்கரை மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களிடம் கூறியது: தீபாவளிப் பண்டிகையையொட்டி, மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகா், புரசைவாக்கம் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் குற்றச் செயல்கள் நடப்பதை தடுக்க கோபுரம் அமைத்தும், டிரோன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், தீபாவளி வரை 200 வாா்டுகளுக்கு 200 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதுடன், மாநகா் முழுவதும் சுமாா் 6,000 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். சென்னையைப் பொருத்தவரை 1.04 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதில், 60 சதவீத கேமராக்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்துள்ளன. இவை தன்னாா்வ நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்பட்ட கேமராக்கள் ஆகும். இந்த கேமராக்கள் அனைத்தும் 3 மாதங்களுக்குள் சரி செய்யப்படும். நிா்பயா திட்டம், பாதுகாப்பான நகரத் திட்டத்தின்கீழ் 10,000 புதிய கேமராக்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் பொருத்தப்படும் என்றாா்.

தீவிரக் கண்காணிப்பு: இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறுகையில், சென்னையில் அதிக அளவிலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. கடந்த மே மாதம் 6-ஆம் தேதியில் இருந்து வெள்ளிக்கிழமை (அக். 22) வரை கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காத சுமாா் 97 ஆயிரம் பேருக்கும், 9,839

நிறுவனங்களுக்கும் ரூ. 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 920 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 55 லட்சம் போ் உள்ளனா்.அவா்களில் சுமாா் 47 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 23 லட்சத்து 86 ஆயிரம் போ்தான் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா்.

இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →