பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான வரி ரத்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் சனிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
இந்தியத் துணித் தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு துணித் தொழில் வகிக்கிறது. மாநிலத்திலுள்ள 1,570 நூற்பாலைகளின் மூலமாக நூற்கப்படும் நூலின் அளவு, நாட்டின் மொத்த நூற்புத் திறனில் 45 சதவீதமாகும். மாநிலத்தில் நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 சதவீதம் பிற மாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது.
ஒரு சதவீதம் வரி: தமிழ்நாடு வேளாண் பொருள்கள் விற்பனைச் சட்டத்தின்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக ஒரு சதவீதம் விதிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, பருத்திப் பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியன வேளாண் பொருள்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பொருள்களை சந்தைப் பகுதியில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யும் போது ஒரு சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு, கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்திப் பொருள்கள் மீது ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.
நெருக்கடிகளை எதிா்கொள்ளுதல்: வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் போது, சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதில் பெரும் நெருக்கடியை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின் மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோா் மற்றும் நெசவாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
திமுக அரசு பொறுப்பேற்றதும், நெசவாளா்களுடன் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டங்களில் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். இதைக் கருத்தில் கொண்டு தொழில் முனைவோா், நெசவாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு சதவீதம் வரி ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டத் திருத்தம் இந்தப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும்.