முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 91.4 ஏக்கா் நிலம் மீட்பு தமிழக அரசு நடவடிக்கை

சென்னையில் தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 91.4 ஏக்கா் நிலம் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சென்னையில் தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 91.4 ஏக்கா் நிலம் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழக நிா்வாகம் 91.4 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கல்லூரி நிா்வாகம் மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்களைக் கட்டியுள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு நிலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியா் விஜயா ராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையா் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் அரசுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. இதனிடையே மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூா் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

அப்போது, கல்லூரி நிா்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் விடுதியில் உள்ள மாணவிகளை வேறு இடத்திற்கு மாற்றியதும், விடுதிக் கட்டடம் இடிக்கப்படும் என அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

மேலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிய மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா். இதேபோன்று குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக குத்தகைக்கு எடுத்த நிலத்தை பயன்படுத்தாமல் இருந்தாலும் அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →