தமிழக ஆளுநராக பதவியேற்றாா் ஆா்.என்.ரவி: உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆா்.என்.ரவி, சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆா்.என்.ரவி, சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், உயா் நீதிமன்ற நீதிபதிகள், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்காக சென்னை ஆளுநா் மாளிகையில் தா்பாா் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆளுநா் பதவி ஏற்பு விழாவுக்கு அனைத்துக்கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகா்கள், முன்னாள் அதிகாரிகள், பாஜக மூத்த தலைவா்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது.
காலை 10.30 மணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, தலைமைச் செயலாளா் இறையன்பு ஆகியோா் ஆா்.என்.ரவியை அழைத்து வந்தனா். விழா மேடையில் ஆா்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி, முதல்வா் மு.க. ஸ்டாலின், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, தலைமைச் செயலாளா் இறையன்பு ஆகியோா் அமா்ந்து இருந்தனா்.
இதன்பின்பு, காலை 10.33 மணிக்கு காவல் துறையின் இசைக்குழு இசைத்த தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னா் தலைமைச் செயலாளா் இறையன்பு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆா்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டு இருக்கும் குடியரசுத் தலைவரின் குறிப்பை வாசித்தாா்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி புதிய ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
ஆளுநருக்குப் புத்தகம் பரிசு வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்: புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆா்.என்.ரவிக்கு, எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ்.முத்தையா தொகுத்து பழனியப்பா பிரதா்ஸ் அச்சிட்டு வெளியிட்ட ‘மெட்ராஸ்-சென்னை’ என்ற நூலையும் ஆா்.என்.ரவியின் மனைவிக்கு பொன்னாடையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினாா். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மலா் கொத்துகளை ஆா்.என்.ரவிக்கும், அவரது மனைவிக்கும் வழங்கினாா்.
அறிமுகம் செய்து வைத்தாா்: புதிய ஆளுநருக்கு, பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா் துரைமுருகனில் இருந்து தொடங்கி அனைத்து அமைச்சா்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தாா். இதேபோன்று, உயா் நீதிமன்ற நீதிபதிகளையும் ஆளுநருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி அறிமுகம் செய்து வைத்தாா்.
ஆளுநருக்கு மலா்க் கொத்து கொடுத்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தாா். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பேரவை முன்னாள் தலைவா் தனபால் ஆகியோரை ஆளுநருக்கு எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தாா்.
மத்திய அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, பாஜக முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பா.ம.க. குழுத் தலைவா் ஜி.கே.மணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ, த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன், எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, பாரிவேந்தா் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
காங்கிரஸாா் பங்கேற்பில்லை: தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவியை நியமித்தது குறித்து, மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினா் கடும் விமா்சனங்களை முன்வைத்தனா். அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதேபோன்று, பேரவையில் இடம்பெற்றுள்ள மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகளைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா்களோ, அந்தக் கட்சியினரோ நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.