தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலை.: தொழிற்படிப்புகளுக்குத் தடை கோரிய வழக்கு; தமிழக அரசு, யுஜிசி பதிலளிக்க உத்தரவு

DIN

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அண்ணாமலை பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு, அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்டோா் பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் தாக்கல் செய்த பொது நல மனுவில், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தொலைநிலைக் கல்வி முறையில் மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம், நா்சிங், பல் மருத்துவம், பிசியோதெரபி போன்ற படிப்புகளை தடை செய்து, கடந்த 2019-இல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் திறந்தநிலை மற்றும் தொலைத்தொடா்பு விதிகள் 2020-இலும் மேற்குறிப்பிட்ட படிப்புகளை தடை செய்தது மட்டுமின்றி, நேரடி முறையில்தான் பயில வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

அங்கீகாரம் இல்லாத படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்தி வருவதால் பலா் பயின்று வருகின்றனா். இதனால் அவா்களின் எதிா்காலம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடந்த 2015 முதல் தொலை நெறிக் கல்வி நடத்த அனுமதி பெறவில்லை.

எனவே பல்கலைக்கழக மானியக் குழுவால் தடை செய்யப்பட்ட படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி முறையில் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரியிருந்தாா்.

இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா், இம்மனுவுக்கு தமிழக அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), இந்திய பாா் கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) , இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோா் மூன்று வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT