தில்லியில் திமுக அலுவலகத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தில்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தில்லி தீன் தயாள் உபாத்யாய் மாா்க் பகுதியில் திமுகவிற்கு மூன்று அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்சி அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, திமுக அலுவலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா, டி.ராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இதன் பின்னர் அலுவலக வளாகத்தில் கட்சி கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். விழாவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு சால்வை அணிவித்து,
நினைவுப் பரிசுகளையும் முதல்வர் வழங்கினார்.
மேலும் தில்லி அறிவாலயத்தில் அண்ணா சிலையை துரைமுருகனும், கருணாநிதி சிலையை டி.ஆர்.பாலுவும் திறந்து வைத்தனர். அதேசமயம் அறிவாலயத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நூலகத்தை சோனியா காந்தி திறந்துவைத்தார்.
விழாவில் அகிலேஷ் யாதவ், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கபில் சிபல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.