தொலைதூர கிராமங்களுக்கான புதிய மருத்துவ சேவை திட்டம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தொலைதூர கிராமங்களுக்கான புதிய மருத்துவ சேவை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை தொடக்கி வைப்பாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
தொலைதூர கிராமங்களுக்கான புதிய மருத்துவ சேவை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை தொடக்கி வைப்பாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசும்போது, புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா். அதில் ஒன்று வேப்பன்னஹள்ளியில் அமைக்கப்படுமா என்றாா்.
அதற்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:
தமிழகத்தில் ஏற்கெனவே 2,282 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8,713 துணை சுகாதார நிலையங்களும் இருக்கின்றன. 272 வட்டார மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளும், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும் என 11,303 மருத்துவக் கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகா்ப்புற சுகாதார நிலையங்களும் அமைக்கப்படுகிறன.
வரும் வெள்ளிக்கிழமை தொலைதூர கிராமங்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கப்படும் வகையில் புதிய திட்டத்தை முதல்வா் தொடக்கி வைக்க உள்ளாா். அதன் அடிப்படையில் தலா ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் என மொத்தம் 4 போ் 389 வாகனங்களில் கிராமங்களுக்கே தேடிச் சென்று மருத்துவம் பாா்க்கும் சிறப்பான திட்டத்தை தொடக்கி வைக்க உள்ளாா். அது மேற்கொள்ளப்படும்போதும் நிச்சயம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் இந்த வாகனங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.