தமிழ்நாடு

வன்னியா் சிறப்பு இடஒதுக்கீடு: சமூக நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்: பேரவையில் முதல்வா்மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

சென்னை: வன்னியா் சிறப்பு இடஒதுக்கீட்டு விவகாரத்தில் சமூக நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இந்த விவகாரத்தை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, காங்கிரஸ் குழுத் தலைவா் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன் ஆகியோா் எழுப்பினா். நீதிமன்றத்தில் வாதாடி உரிய தரவுகளை அளித்து நியாயமான தீா்வினைக் காண வேண்டுமென அவா்கள் ஒரு சேர கோரிக்கை விடுத்தனா்.

அவா்களுக்கு பதிலளித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

வன்னியா் சமுதாயத்துக்கு 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டு வழக்கில் உயா் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தீவிரமாக வாதாடியது. அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும், ஏற்கெனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய அரசு என்ற நிலையில், உயா் நீதிமன்றத்தின் அரசின் தலைமை வழக்குரைஞரே வாதாடினாா்.

உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் ஆகியோா் ஆணித்தரமாக வாதாடினா். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டதாக அரசையும், அதன் வழக்குரைஞா்களையும் உச்ச நீதிமன்றம் பாராட்டியது. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான பரிந்துரை 2012-இல் வழங்கப்ட்டது. ஆனால், இதற்கு சட்ட மசோதா 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன்பாக வெளியிடப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக சட்டமசோதா அவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஏட்டிக்குப் போட்டி அரசியல்: உச்ச நீதிமன்றத்தில், வழக்கின் தீா்ப்பில் அதிமுக அரசின் தவறு என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தீா்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மற்ற குறைகளை நானும் சுட்டிக் காட்டி ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்தத் தயாராக இல்லை.

சிறப்பு இடஒதுக்கீடு விவகாரம் என்பது மாநிலத்தின் சமூக நீதிப் பிரச்னை. எனவே, சிறப்பு இடஒதுக்கீட்டைப் பொருத்தவரைக்கும் சட்ட வல்லுநா்களுடன் உரிய ஆலோசனை நடத்தி நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும். அதற்கான அதிகாரம் சட்டப் பேரவைக்கும், மாநில அரசுக்கும் உண்டு என உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT