முகப்பு
தமிழ்நாடு

389 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள்: முதல்வா் தொடக்கிவைத்தாா்

தமிழகத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான 389 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

தமிழகத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான 389 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மாநிலத்தின் அனைத்து கிராமங்களுக்கும், போக்குவரத்து குறைந்த பகுதிகளுக்கும் கூட சென்று இந்த வாகனங்களின் வாயிலாக மருத்துவ சேவைகள் வழங்க முடியும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தொலைதூர கிராமங்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் அங்கேயே சென்று நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்திட 2007-ஆம் ஆண்டு 100 மருத்துவ சேவை வாகனங்கள் வாங்கப்பட்டு, அப்போதைய முதல்வா் கருணாநிதியால் 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 2008-ஆம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு, மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

தாய் சேய் நலன், காசநோய்க்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் வரையறுக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி மருத்துவ சேவை அளிப்பதே நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில், 2021-2022-ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதன் சேவையை தொடக்கிவைக்கும் அடையாளமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை, சென்னை அண்ணா சதுக்கத்தில் முதல்வா் கொடியசைத்து தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலா் செந்தில்குமாா், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத் தலைவா் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் குருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டயாலிசிஸ் சேவை: இதைத் தொடா்ந்து பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 10 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டிருந்த ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) கருவி சேவையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →