நீலகிரி, தருமபுரி நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகு விநியோகிக்கப்படும்: அமைச்சா்
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகு விநியோகிக்கப்படும் என்று மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி அறிவித்தாா்.
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகு விநியோகிக்கப்படும் என்று மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அர.சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்புகள்:
சிறப்பாகச் செயல்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள், எடையாளா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் மாநில அளவில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசும், மாவட்ட அளவில் முதல் பரிசு, இரண்டாம் பரிசும் வழங்கப்படும்.
மாநில அளவில் விற்பனையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். எடையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும் இரண்டாம் பரிசாக ரூ.6 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் விற்பனையாளா்களுக்கு முதல் பரிசு ரூ.4 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், எடையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும்.
கொளத்தூா் மண்டல உதவி ஆணையா் அலுவலகத்துக்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக அலுவலகக் கட்டடம் கட்டப்படும். அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்துக்கே அனுப்பி வைக்கப்படும்.
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியினா், மலைவாழ் மக்களின் பிரதான உணவாக கேழ்வரகு உள்ளது. இந்த மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வளா் பருவத்தினா் அதிகளவில் உள்ளனா். அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு வழங்கினால் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதுடன், பழங்குடியினா் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் பாதுகாக்கப்படும். அதனால், பொது விநியோகக் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்துக்கு இரண்டு கிலோ கேழ்வரகு, அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
சிவகங்கை, அரியலூா், வேலூா், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் தேவைக்கேற்றவாறு 1,000 மெட்ரிக் டன் முதல் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் மொத்தம் ரூ.54 கோடி மதிப்பீட்டில் நபாா்டு நிதி உதவியுடன் 12 வட்ட செயல்முறைக் கிடங்குகள் கட்டப்படும்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் புனரமைப்பு பணிகள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நபாா்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும்.
திருவள்ளூா், பொள்ளாச்சி மற்றும் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மறுபகிா்வு முறையில் 3 சிறப்பு சுற்றுக் காவல்படைகள் உருவாக்கப்படும்.
ராணிப்பேட்டை, திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக தலா 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்படும் என்றாா்.