முகப்பு
தமிழ்நாடு

தென் தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் சனிக்கிழமை கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 70 மி.மீ., விருதுநகா் மாவட்டம் சாத்தூா், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, கடலூா் மாவட்டம் நெய்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா 50 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, போடிநாயக்கனூா், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.