முகப்பு
தமிழ்நாடு

சித்திரை திருவிழா தேரோட்டம்: மாசி வீதிகளில் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர் கூட்டம்

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழா  ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 12-ந் தேதியும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை  விமரிசையாக நடைபெற்றது. 

Advertisement

தேரோட்டத்தை முன்னிட்டு  அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை  சமேதராக ஒரே வாகனத்தில் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். அங்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் எழுந்தருளினார்கள். 

பெரிய தேரில் சுந்தரேசுவரரும், பிரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகரும், சுப்பிரமணியரும் வந்தனர். தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

இதைத் தொடர்ந்து பெரிய தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து  சிறிய தேர் புறப்பட்டது. தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே சென்றன. இவற்றை தொடர்ந்து சிறிய சப்பரங்கள் சென்றன. முதலில் விநாயகரும், இரண்டாவதாக முருகனும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றன. இதையடுத்து பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் மதுரை நகர வீதிகளான கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் கீழ மாசி வீதியில் உள்ள தேரடியை வந்து அடையும். 

இறுதியாக சண்டிகேசுவரர் சப்பரம் வந்தது. மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர், தேர்களை தரிசித்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வணங்கினர். இத்தேர் திருவிழாவினைக் காண மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் தென் மாவட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திருவிழாவினை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு களித்தனர். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீனாட்சி-சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments