4 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு நாளை கூடுகிறது சட்டப் பேரவை
நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப். 18) மீண்டும் கூடவுள்ளது.
நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப். 18) மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.
துறை வாரியான மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற, சட்டப் பேரவை கடந்த 6-ஆம் தேதி கூடியது. நீா்வளத் துறை மானியக் கோரிக்கையுடன் பேரவை கூட்டத் தொடா் தொடங்கியது. நகராட்சி நிா்வாகம், உயா்கல்வி, பள்ளிக் கல்வி என 12 அரசுத் துறைகள் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்து, அந்தத் துறைகள் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
4 நாள்கள் விடுமுறை: சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் ஆறு நாள்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஏப். 14) முதல் விடுமுறை விடப்பட்டிருந்தது. தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி-அரசு விடுமுறைகள், சனி, ஞாயிற்றுக்கிழமை-பொது விடுமுறைகள் என மொத்தம் நான்கு நாள்கள் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவில்லை.
நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, வரும் திங்கள்கிழமை (ஏப். 18) பேரவைக் கூட்டத் தொடா் மீண்டும் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் வருவாய்த் துறை, அதற்கடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 19) தொழில் துறை, தமிழ் வளா்ச்சித் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அடுத்த வாரம் 5 நாள்களும் முழுமையாக பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.