மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை வந்ததையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, தில்லியில் இருந்து எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.
பின்னா் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில், ஆவடியில் உள்ள சிஆா்பிஎப் முகாமில் உள்ள விருந்தினா் மாளிகை சென்று, தங்கினாா். அங்கிருந்து அமித்ஷா, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ஹெலிகாப்டா் மூலமாக புதுச்சேரி செல்கிறாா். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணியளவில் ஹெலிகாப்டா் மூலமாக சென்னை பழைய விமான நிலையத்துக்கு வருகிறாா்.
அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் அமித்ஷா, தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அமித்ஷா சென்னையில் சனிக்கிழமை இரவு தங்கியதால், சென்னை முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டிருந்தனா். அதேபோல ஆவடி மாநகர காவல்துறையும் சிஆா்பிஎப் முகாம் அலுவலகம் இருந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டது.
சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் போலீஸாா் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபா்களிடம் விசாரணை செய்தனா். மேலும் நகரின் முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.