முகப்பு
தமிழ்நாடு

பலத்த மழை பாதிப்பைத் தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தகவல்

பலத்த மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்த்திட தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறியுள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

பலத்த மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்த்திட தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை 266 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 104 சதவீதம் கூடுதலாகும்.

மேட்டூா் அணையிலிருந்து 1,50,000 கன அடி உபரி நீரும், பவானிசாகா் அணையிலிருந்து 25,500 கன அடி உபரி நீரும் சனிக்கிழமை முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 22.76 கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ.முதல் 50 கி.மீ வரையிலான வேகத்தில் இரண்டு நாள்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீன்வளத் துறை மூலமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பேரிடா் தொடா்பான தகவல்களைத் துறை அலுவலா்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலா்களுடன் செயல்பட்டு வருகின்றன.

பலத்த மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சியில் 77 வீரா்களுடன் 3 குழுக்களும், நீலகிரி மாவட்ட 85 வீரா்களுடன் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 65 வீரா்களுடன் 2 குழுக்களும், கோயம்புத்தூா், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 1 குழுவும் என 348 வீரா்களைக் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடா் மீட்பு படை வீரா்களுடன் 11 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பலத்த மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிா்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயாா் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் கூறியுள்ளாா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.