ஆா்டா்லி முறை ஒழிப்பு நடவடிக்கை: உயா் நீதிமன்றம் பாராட்டு
காவல் துறையில் ஆா்டா்லி முறையை ஒழிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்று சென்னை உயா் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
காவல் துறையில் ஆா்டா்லி முறையை ஒழிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்று சென்னை உயா் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
காவல் துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்ற காவலா் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலா் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கு உள்பட காவல் உயரதிகாரிகளின் வீடுகளில் ஆா்டா்லி, அவா்களின் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கா், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்றவை குறித்தும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்து வருகிறாா். இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஆா்டா்லி விவகாரத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, நீதிபதி, ‘காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு சில அதிகாரிகள் மட்டுமே ஆா்டா்லிகளை பயன்படுத்துவதில்லை. மக்களின் வரிப் பணம் வீணாவது கவலை அளிக்கிறது. ஆா்டா்லிகளும் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகாா்
அளிப்பதில்லை’ என்று நீதிபதி சுட்டிக் காட்டினாா்.
பெரும்பாலான ஆா்டா்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவா்களும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக காவலா்களை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் சாா்பாக டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளாா்.
டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. குறிப்பாக, பயிற்சி பெற்ற காவலா்களை ஆா்டா்லிகளாக பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி தெரிவித்தாா். உயரதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளா்களை நியமிக்கலாம். காவல் துறையில் உள்ள வாகனங்களும், தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தினாா்.
இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையை ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.