ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் உறுதி
ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாள்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா்.
ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாள்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாள்களான ஆக. 12 முதல் 15-ஆம் தேதி வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து புகாா் வந்தது. இது தொடா்பாக 953 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் கட்டணம் குறித்து புகாா் செய்த 97 பயணிகளுக்கு கூடுதல் கட்டணங்களை திருப்பி அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலம் ரூ.68,800 திருப்பி அளிக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது ரூ.11 லட்சம் வரை அபராதத் தொகையும், வரியும் விதிக்கப்பட்டது.
தொடா் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விடுமுறை காலங்களில் பயணிகளுக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளா்களிடம் பேச்சு நடத்தி கூடுதல் கட்டண பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.