மாநகரப் பேருந்துகளில் இருக்கையின் பின்புறம் விளம்பரம்: வருவாயைப் பெருக்க முடிவு
போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்கும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் இருக்கையின் பின்புறம் தனியாா் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்கும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் இருக்கையின் பின்புறம் தனியாா் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் வருவாயைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநகர பேருந்துகளின் பின்புறத்திலும், ஓட்டுநா் இருக்கையின் பின்புறத்திலும் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி உள்ளது. இதன் மூலம் குறைந்த அளவிலேயே வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியது: பேருந்தின் 2 பக்கமும், தனியாா் விளம்பரம் செய்ய டெண்டா் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் அரசு பேருந்துகளில் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரம் செய்யப்படுகிறது. அது போல சென்னை மாநகர பேருந்துகளிலும் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என போக்குவரத்துத் துறை கருதுகிறது. அதன்படி 3 ஆயிரம் பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்கு டெண்டா் கோரப்பட்டுள்ளது. இது தவிர 500 பேருந்துகளில் பயணிகள் இருக்கையின் பின்புறம் ’ஏ4’ அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் இருக்கைகளில் விளம்பரம் செய்யும் திட்டம் தொடங்கப்படும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை தொடா்ந்து மேலும் 1,000 பேருந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும். குளிா்சாதன பேருந்துகள், 2 மகளிா் பேருந்துகளில் பக்கவாட்டில் அரசு நிறுவன விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. இது போல தனியாா் விளம்பரமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடும் போது இடையிடையே தனியாா் தொழில் சாா்ந்த விளம்பரம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடா்ந்து விரிவாக்கம் செய்யப்படும் என்றனா்.