முகப்பு
தமிழ்நாடு

விலங்குகளை முன்னிறுத்தி போராட அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயா் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயா் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி நிா்வாகி முத்து என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனா். இதைத் தடுக்க வேண்டும், அவா்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி காவல் துறைக்கு நான் அளித்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,‘ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது. எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது மிருக வதை தடைச் சட்டத்தை மீறிய செயல். எனவே, எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது’ என்று உத்தரவிட்டாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் , ‘விலங்குகளை பயன்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அதற்காக அனுமதி கோரிய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து வழக்கமான நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதிக்கும்படி காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.