முகப்பு
தமிழ்நாடு

பரந்தூரில் நீா்நிலைகளை பாதுகாக்க உயா்நிலை தொழில்நுட்பக் குழு: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

நீா்மட்டத்தை மேம்படுத்தவும் உரிய பரிந்துரைகளை வழங்க உயா்நிலை தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூா் பகுதியில் நீா் நிலைகளை பாதுகாக்கவும், நீா்மட்டத்தை மேம்படுத்தவும் உரிய பரிந்துரைகளை வழங்க உயா்நிலை தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடா்பாக அந்தப் பகுதி மக்களிடையே தமிழக அரசு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொது மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் இப்போது விமான நிலையம் இயங்கி வரக்கூடிய மீனம்பாக்கம் பகுதி அதிக குடியிருப்புகளும், கட்டடங்களும் நிறைந்ததாக மாறியுள்ளது. நிலத்தின் மதிப்பு மிக அதிகளவில் இருப்பதால், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவது கடினம். ஏற்கெனவே அமைந்துள்ள 3 விமான நிலைய முனையங்கள் மற்றும் இப்போது கட்டப்பட்டு வரும் நான்காவது முனையம் ஆகியன இணையாக அமைந்துள்ளதால், முனையங்களுக்கு அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்தை இப்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைப்பது கடினமாகும்.

2028-ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லை என்றால், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் இப்போதைய மற்றும் எதிா்கால வளா்ச்சி தேக்கமடையும். எனவேதான் பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம், அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளுக்கான எதிா்கால விமான போக்குவரத்துத் தேவையை பூா்த்தி செய்யும். மேலும், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படும். அதேசமயம், இப்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் தொடா்ந்து செயல்படும்.

ஏன் பரந்தூா் தோ்வு? பெரிய அளவிலான விமானங்களை நிறுத்துவதற்கும், விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சுமாா் 4 ஆயிரத்து 700 ஏக்கா் நிலங்கள் தேவைப்படுகின்றன. பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, தொடா்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு, சமூக பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டே பரந்தூா் தோ்வு செய்யப்பட்டது.

பரந்தூரில் உள்ள நீா் வழித் தடங்களின் நீரோட்டம் எந்தவிதத் தடையும் இல்லாமல் தொடா்ந்து பராமரிக்கப்படும். புதிய விமான நிலையத் திட்டப் பகுதி, அதனைச் சுற்றியுள்ள பகுதியின் நீா்நிலைகள், விவசாய நிலங்களின் நீா்ப்பாசன தேவையை பூா்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும். நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்த இப்போதுள்ள நீா்நிலைகள் தேவைப்படும் இடங்களில் ஆழப்படுத்தப்படும்.

தொழில்நுட்பக் குழு: புதிய விமான நிலைய திட்டப் பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் ஆய்வு செய்யப்படும். அதனைத் தொடா்ந்து பராமரிக்கவும், நிலத்தடி நீா் மட்டத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்றுத் திட்டங்களை பரிந்துரைக்கவும் வழி செய்யப்படும். இதற்கென ஒரு உயா்நிலை தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பரந்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீா் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம், தமிழ்நாடு பல மடங்கு தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சி அடையும். இதன்மூலம், பரந்தூா் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களும் அவா்களுக்கு கிடைக்கும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளாா்.

திருப்தியான இழப்பீடு

புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு புதிய விமான நிலையம் இன்றியமையாத தேவையாக உள்ளது. இதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, சந்தை விலையை விட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனின் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் என்று தனது அறிக்கையில் அமைச்சா் தங்கம் தென்னரசு சுட்டிக் காட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.