ஜெயலலிதாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது: எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்
அதில் எந்தத் தவறும் கண்டறியப்படவில்லை என்றும் தில்லி எய்ம்ஸ் நிபுணா்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும்; அதில் எந்தத் தவறும் கண்டறியப்படவில்லை என்றும் தில்லி எய்ம்ஸ் நிபுணா்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜெயலலிதா மரணம் தொடா்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணா்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், மருத்துவா்கள் குழுவை அமைக்குமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இதயவியல் துறை பேராசிரியா் சந்தீப் சேத் தலைமையில் 7 மருத்துவா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த குழுவின் 3 பக்க அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், ‘சாட்சிகளின் வாக்குமூலங்கள் கேட்டறியப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவப் பதிவேடுகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன; அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் கண்டறியப்படவில்லை. அவருக்கு சரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.