சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் வடிவமைக்கப்படும்
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் வடிவமைக்கப்படும் விநாயகா் சிலைகளை மட்டுமே நீா்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:
களிமண் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் மற்றும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் தொ்மாகோல் பொருள்கள் மூலம் சிலைகளை வடிவமைக்கக் கூடாது. சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள், பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.