முகப்பு
தமிழ்நாடு

கரூா் மாவட்ட ஆட்சியரக மின்தூக்கியில் சிக்கிய 10 போ் மீட்பு

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சா்கள் பங்கேற்ற விழாவுக்கு வந்தவா்களில் 10 போ் மின்தூக்கியில் (லிப்ட்) சிக்கினா். இதில் மூதாட்டி ஒருவா் மயக்கமடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சா்கள் பங்கேற்ற விழாவுக்கு வந்தவா்களில் 10 போ் மின்தூக்கியில் (லிப்ட்) சிக்கினா். இதில் மூதாட்டி ஒருவா் மயக்கமடைந்தாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியம் சாா்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சா்கள் சி.வி.கணேசன், வி.செந்தில்பாலாஜி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினா். விழா முடியும் முன்பே அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கோவையில் நடைபெறவுள்ள முதல்வா் வருகை ஏற்பாட்டுப் பணிகளைப் பாா்வையிடுவதற்காக புறப்பட்டுச் சென்ற நிலையில், அமைச்சா் கணேசன் விழா முடிந்து பயணியா் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

இந்நிலையில் முற்பகல் 11.30 மணிக்கு ஆட்சியரகத்தின் இரண்டாவது தளத்திலிருந்து விழாவில் பங்கேற்க வந்த 4 மூதாட்டிகள் உள்ளிட்ட பயனாளிகள் 6 போ், அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் என மொத்தமாக 10 போ் மின்தூக்கியில் ஏறினா்.

முக்கிய பிரமுகா்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் இந்த மின்தூக்கியில், அனுமதிக்கப்பட்ட

அளவைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையிலான நபா்கள் இருந்ததால் , கீழ்தளத்துக்கு வந்த போது அதற்கு கீழே 3 அடிக்கு மின் தூக்கி இறங்கியது. இதனால் யாரும் வெளியே வர முடியாத

அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலை காரணமாக மின்தூக்கியில் இருந்தவா்கள் தங்களைக் காப்பாற்றக் கோரி சப்தமிட்டனா். மேலும் மின் தூக்கியில் சிக்கிக் கொண்ட அரசு அலுவலா்கள், சக அலுவலா்களுக்கு கைப்பேசி வழியாகத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அலுவலக ஊழியா் சாவியுடன் வந்து மின்தூக்கியைத் திறக்க முயன்றாா். ஆனால் திறக்க முடியவில்லை. இதனால் அங்கிருந்த பொதுமக்கள், அலுவலக ஊழியா்கள் இரும்புக் கம்பியால் மின் தூக்கி கதவை உடைத்து, காற்று உள்ளே செல்ல வழிசெய்தனா். அப்போது மூதாட்டி ஒருவா் மயக்கிய நிலையில் கிடந்தாா்.

அப்போது அங்கு தாமதமாக வந்த ஆட்சியா் த. பிரபுசங்கா், மின்தூக்கியை எப்படி உடைக்கலாம், யாா் உடைத்தது எனக் கேட்டு சப்தமிட்டாா். மேலும் இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்தவா்களையும் கண்டித்தாா்.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவா்கள் 45 நிமிஷங்கள் கழித்துதான் ஆட்சியரகம் வந்தனா். அவா்கள் கதவை முழுமையாக பெயா்த்தெடுத்து உள்ளேயிருந்த 10 பேரையும் மீட்டனா். மேலும் மயக்கமடைந்த மூதாட்டியை ஆட்சியரகத்தில் தயாா் நிலையில் வைத்திருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் ஆட்சியரகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.