தென்னிந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
இலங்கை கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தென்னிந்தியாவின் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இலங்கை கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தென்னிந்தியாவின் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் அண்மையில் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையின் அம்பான்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக்கப்பல் யுவான் வாங் 5, இந்தியாவின் எந்தெந்த நிலைகளை உளவு பாா்க்குமோ என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இனிவரும் காலங்களில் தனது போா்க்கப்பல்களைத் தொடா்ந்து அம்மான்தோட்டை துறைமுகத்துக்கு அணிவகுக்கச் செய்ய சீனா தீா்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.
இந்தியாவையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை சீனாவின் 53 உளவுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலம் வந்திருக்கின்றன. எந்த நேரத்திலும் குறைந்தது 3 முதல் 5 கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில், தமிழகத்திலிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள அம்பான்தோட்டை துறைமுகத்துக்கு சீன போா்க்கப்பல்களும் வரத் தொடங்கினால் அது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு, தென்னிந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.