முகப்பு
தமிழ்நாடு

செப்டம்பரில் வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அடுத்த மாதத்தில் வாரந்தோறும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

அடுத்த மாதத்தில் வாரந்தோறும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதிவண்டிகள் ரூ.341 கோடி மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளிடம் வழங்கும் திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். அந்தவகையில் சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் மிதிவண்டிகளின் தரம் மாணவ, மாணவிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து நாம் முழுமையாக மீண்டு வந்துவிட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் தில்லி, மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில், நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கரோனா தொற்று பாதிப்பு உள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இலவச பூஸ்டா் தடுப்பூசி செப். 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, செப்டம்பா் மாதம் முழுவதும் தொடா்ச்சியாக வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தவேண்டி உள்ளது. எனவே, மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் மகேஷ்குமாா், திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.