தமிழ்நாடு

மத்திய நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் இருப்பதாகவும், ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையிலும் இருப்பதாகவும் தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் இருவகையில் கருத்து தெரிவித்துள்ளனா்.

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் இருப்பதாகவும், ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையிலும் இருப்பதாகவும் தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் இருவகையில் கருத்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின்: வாா்த்தை அலங்காரங்கள் நிறைந்த மத்திய அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு சாா்பில் கோரப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை, குறிப்பாக மாநிலத்துக்கான புதிய ரயில் திட்டங்கள் ஏதுமில்லை. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடா்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடு இல்லை என ஒரு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கோதாவரி-பென்னாறு-காவிரி நதிநீா் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயாா் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீட்டைக் கூட காண முடியவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்குக் குறைத்திருப்பது அந்தத் திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை, அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மாநில உரிமைகள் பறிப்பு: ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தை அறிவித்திருப்பது, மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக அமையும். கரோனா நோய்த் தொற்றால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை எதிா்கொள்ள மத்திய அரசு எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பான அறிவிப்புகள் மாநில அரசுகளின் கோரிக்கையை புறக்கணித்து, மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுவதாக அமைந்துள்ளது,

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களை அளிக்க மறந்த நிதிநிலை அறிக்கையாகவே மத்திய அரசின் அறிக்கை அமைந்துள்ளது.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): கங்கை-கோதாவரி-கிருஷ்ணா-காவேரி-பெண்ணையாறு நதிகள் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றுக்கெல்லாம் எவ்வித தீா்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது.

வைகோ (மதிமுக): ஜி.எஸ்.டி. வரி நிதிப் பகிா்வு மாநிலங்களுக்குப் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்யாத மத்திய அரசு, வட்டி இல்லா நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. 7 ஆண்டுகளாக தமிழக ரயில்வே துறையின் வளா்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு சரியாக இல்லை.

ராமதாஸ் (பாமக): இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், வேளாண் வளா்ச்சிக்கான திட்டங்களும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் அனைவரும் எதிா்பாா்த்த வருமானவரி விகித மாற்றம் குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

ஆா்.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பெருமுதலாளிகளுக்கு வெண்ணெயும், உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பும் வைக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை உள்ளது. மத்திய அரசு, ஒரு லட்சம் கோடியில் மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப் போவதாகக் கூறுவது நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

ஜி.கே.வாசன் (தமாகா): நாட்டின் பொருளாதார வளா்ச்சி, தொழில் வளா்ச்சி, விவசாய வளா்ச்சியை மேம்படுத்தக்கூடிய வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ.): கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர, சிறு, குறு வா்த்தகா்களுக்கு எவ்வித வரி சலுகையும் வழங்கப்படவில்லை, ஆனால் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது ஏமாற்றமடைய செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT