முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேனி மாவட்டம், பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புது தில்லி: தேனி மாவட்டம், பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், தேவாரம் பொட்டிபுரம் அம்பரப்பா் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2011-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த ஆய்வகம் அமைந்தால், மேற்குத் தொடா்ச்சி மலையின் பல்லுயிா் பெருக்க பகுதியும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் எனக் கூறி இந்தத் திட்டத்துக்கு எதிராக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீா்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இதன் பிறகு, ஆய்வகப் பணிகளைத் தொடங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இதை எதிா்த்து ‘பூவுலகின் நண்பா்கள்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் 2015-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2.11.2018-இல் விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை அங்கீகரித்த போதிலும், இந்தத் திட்ட இடம் கேரளத்தில் உள்ள தேசிய பூங்காவின் சுற்றுச்சூழல் உணா்வு மண்டலத்தில் இருப்பதால், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிறகே அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 2019-இல், ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பின் சாா்பில் அதன் நிா்வாகி கோ.சுந்தர்ராஜன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு மூலம் புதன்கிழமை கூடுதல் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட இடங்களில் சில பகுதிகள் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் விவசாயத் தேவைக்கும், குடிநீா் தேவைக்கும் நீரை அளிக்கும் முக்கியமான நீா்ப்படிப்புப் பகுதிகளைக் கொண்டதாகும். இந்தத் திட்ட அமைவிடம் மதிகெட்டான் - பெரியாா் புலிகள் இடம் பெயா்வு பாதையில் அமைந்துள்ளதால், டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தின் (டிஐஎஃப்ஆா்) முன்மொழிவுக்கு வனவிலங்கு அனுமதி வழங்க தேனி மாவட்ட வனத் துறை அதிகாரி பரிந்துரைக்கவில்லை. மேலும், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளால் புலிகளின் வாழ்விடம் பாதிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற பல பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முதன்மை தலைமை வன பாதுகாவலா், தலைமை வனவிலங்கு வாா்டனும் திட்டத்தை பரிந்துரைக்கவில்லை.

இந்தத் திட்ட அமைவிடமானது உலக அளவில் உயிா்ப் பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மேற்கு மலையாகும். இந்த மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிா்வுகள் ஏற்பட்டால் கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால், இந்த மலையை புலிகள் தவிா்க்கும் சூழலும் உருவாகும். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களின் எதிா்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, இந்த மலையின் செறிந்த பல்லுயிா் பெருக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் தமிழக முதல்வா் 17.6.2021-இல் பிரதமா் மோடியிடம் இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை மனு அளித்தாா். அதேபோன்று, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தலைமையில் தமிழக அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவும் கடந்த ஆண்டு மத்திய அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்து இந்தத் திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.