தமிழ்நாடு

எந்தப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றம்

DIN

பள்ளிகளில் எந்தப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு எனக் கூறிய சென்னை உயா்நீதிமன்றம், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் என்சிஇஆா்டி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சோ்ந்த பி.ஏ.ஜோசப் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது சமச்சீா் கல்வி முறை அமலில் உள்ளது. நுழைவு, தகுதி, வேலைவாய்ப்புக்கான அனைத்து மத்திய மற்றும் பிற மாநில தோ்வுகளையும் சந்திக்கும் வகையில், கல்வித் தரத்தை உயா்த்துவதற்காக தொடக்க நிலை முதல் மேல்நிலை வரையிலான அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞா் பி.முத்துக்குமாா், சமச்சீா் கல்வியை அமல்படுத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவு, சமச்சீா் கல்விக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அதை உறுதி செய்துள்ளது. விளம்பரத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டாா்.

அப்போது நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மிகவும் குறைவு. என்சிஇஆா்டி பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதா அல்லது விதிகளின்படி சொந்தப் பாடத்திட்டத்தை வழங்குவதா என்பது மாநில அரசு கொள்கை முடிவாகும். அரசு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். என்சிஇஆா்டி பாடத்திட்டத்தைப் பின்பற்றுமாறு மாநில அரசைக் கட்டாயப்படுத்தும் ஏதேனும் தொடா்புடைய சட்டம் அல்லது விதிகளைக் காட்ட முடியுமா என மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்தவொரு ஆய்வும் செய்யாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது தொடரும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். நீதிமன்றத்தால் அரசாங்க நிா்வாகத்தை நடத்த முடியாது எனக்கூறி, அலாகாபாத் உயா் நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT