காஞ்சிபுரம் அருகே கரும்பில் வடிவமைக்கப்பட்டிருந்த மாடு
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் பகுதியில் மதுரா குண்டுகுளம் கிராமத்தில் விவசாயி, இரண்டு மாடு போன்ற உருவங்களை கரும்புகளால் வடிவமைத்திருந்தார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் பகுதியில் மதுரா குண்டுகுளம் கிராமத்தில் பாமக பிரமுகர் ஒருவர் சனிக்கிழமை தனது வயலில் நாட்டு மாடுகள் இனத்தை பாதுகாக்கவும், அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இரண்டு மாடு போன்ற உருவங்களை கரும்புகளால் வடிவமைத்திருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்ப்பூர் அருகேயுள்ளது மதுரா குண்டுகுளம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவரும்,பாமக மாநிலத் துணைத் தலைவருமாக இருந்து வருபவர் ஆ.செந்தில்குமார். விவசாயியான இவர் தனது வயல் வெளியில் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக விவசாயிகளின் உற்ற நண்பனாக இருந்து வருவதும், பசிக்கு பால் தந்து தாயாகவே இருந்து வரும் நாட்டு பசுமாடுகளை சிறப்பிக்கும் வகையிலும் கரும்புகளால் இரு மாடுகளை வடிவமைத்திருந்தார்.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
Advertisement
கரும்புகளால் செய்யப்பட்டிருந்த இரு மாடுகளுக்கும் நடுவில் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து குளவையிட்டு வழிபாடுகளும் செய்தனர். அவர்களிடமிருந்த மாடுகளுக்கும் மலர்மாலைகள், புத்தாடைகளை கழுத்தில் அணிவித்தும், திலகமிட்டும் வழிபட்டனர்.
இது குறித்து ஆ.செந்தில்குமார் கூறியது, தமிழர்களின் வீரத்தின் அடையாளங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியாகும். பாம்பரியமிக்க இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைமாடுகளின் இனம் பெருமளவில் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களில் பங்கேற்பதற்காகவே 87 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. இப்போது 34 வகைகளே இருக்கின்றன. நாட்டு மாடுகளின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், விவசாயிகள் நாட்டு மாடுகள் இனத்தைப் பாதுகாக்கவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கரும்புகளால் ஆன இரு மாடுகளை வடிவமைத்திருக்கிறோம்.
இந்த இரு கரும்புகளால் செய்யப்பட்ட மாடுகளையும் 5 பர் கொண்ட குழுவினர் கடந்த 7 நாட்களாக சுமார் 1000 கரும்புகளைக் கொண்டு வடிவமைத்துள்ளனர். இன்றைக்கு இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டிகளைப் போல அந்தக்காலத்து அவசர ஊர்திகளாக மாட்டு வண்டிகள் தான் இருந்தன என்பதையும் மக்கள் மறந்து விடக்கூடாது எனவும் ஆ.செந்தில்குமார் தெரிவித்தார்.