தமிழ்நாடு

3-ஆவது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிப்பு: ஈரோட்டில் முக்கியச் சாலைகள் வெறிச்சோடியது

DIN


ஈரோடு: மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் ஈரோட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கியச் சாலைகள் வெறிச்சோடியது.  

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தி வருகிறது. 

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் தொடர்ந்து கரோனா தாக்கம் ஒவ்வொரு நாள் அதிகரித்து வருவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதேபோன்று கடந்த 2 வார முழு ஊரடங்கின் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுவே இந்த வாரமும் தொடரும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, இன்று 3-ஆவது வாரமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

வெறிச்சோடி காணப்படும் சாலைகள்.

ஈரோடு மாவட்டத்தில்  அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க் பகுதி, காளைமாடு சிலை, மணிக்கூண்டு, ஆர் .கே. வி.ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரயில் நிலையம், பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சம்பத் நகர், பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதைப்போல் பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி பகுதியில் செயல்பட்டுவரும் உழவர் சந்தையும் அடைக்கப்பட்டிருந்தன.

ஆனால் அதே நேரம் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டன.  இதேபோல் ஒட்டலிலும் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் சேவை வழங்கப்பட்டன. 

அத்தியாவசிய பொருள்களான பால்,சேவைகள் வழக்கம்போல் நடைபெற்றன. இதைப்போல் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆய்வுக் கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கின. 

இன்று முழு ஊரடங்கை ஒட்டி பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

அதேநேரம் முன் களப்பணியாளர்கள் வழக்கம் போல் இன்று பணிக்கு சென்றனர். பஸ் நிலையங்களில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT