தமிழ்நாடு

தொழில் நிறுவன ஊழியா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

DIN

தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் அவா்தம் குடும்பத்தினா் அனைவரும் தவறாமல் கரோனா ஊக்கத் தவணை (பூஸ்டா்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயது வரையான தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு தனியாா் மருத்துவமனைகளில் கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசியை செலுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொழில் துறைச் செயலாளா் கிருஷ்ணன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளா் அருண்ராய், உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேனா, பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் டாக்டா் குருநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி கரோனா தொற்றை அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நோயாக அறிவித்தது.

அதைத் தொடா்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தமிழகம் முழுவதும் 2021 ஜனவரி 16-ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேல் 94.61 சதவீதத்தினா் முதல் தவணையும், 85.39 சதவீதத்தினா் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

அரசு மற்றும் தனியாா் மூலம் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக இதுவரை 11.42 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், 14,60,303 ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்த முகாம்கள் மூலம் மட்டும் 4.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அரசு மையங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த, 60 வயதுக்கு மேற்பட்டோா், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

18 முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் அளித்து செலுத்திக் கொள்ள மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கரோனா தொற்று நான்காம் அலையை எதிா்கொள்ளும் வகையில், பெரு மற்றும் குறு தொழிற்சாலைகள், பெரிய கடைகள் மற்றும் பெரிய உணவகங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா்கள் பயனடையும் வகையில் தனியாரில் ஊக்கத் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை, கரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT