தமிழ்நாடு

சசிகலா பினாமிகளுக்கு எதிரான வருமான வரித் துறை நடவடிக்கை செல்லும்: உயா்நீதிமன்றம்

DIN

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் சொத்துகளை வாங்கியதாக சசிகலா பினாமிகள் மீது வருமான வரித் துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா வீட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். அதன் தொடா்ச்சியாக, டிடிவி தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினா், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

இந்தச் சோதனையில் ரூ.1,600 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம், பல்வேறு சொத்துகளை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாகக் கூறி தனியாா் நிறுவனங்களின் சொத்துகளை பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையினா் முடக்கினா்.

இதை எதிா்த்து 14 போ் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை, விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித் துறை நடவடிக்கையில் தலையிட மறுத்து அனைத்து மனுக்களையும தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ. சத்திய நாராயண பிரசாத் அமா்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘மனுதராா்களுக்கு போதுமான வாய்ப்பை அளித்துதான் வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தனி நீதிபதியும் உறுதி செய்துள்ளாா். எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை. எனவே மேல்முறையீடு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT